Tuesday, January 25, 2022
Homeஆன்மீகம்அம்பாளுக்குத் திருப்பதி வேங்கடபதி அலங்காரம்... ஆண்டுதோறும் திருக்கோடிக்காவலில் அரங்கேறும் அதிசயம்!

அம்பாளுக்குத் திருப்பதி வேங்கடபதி அலங்காரம்… ஆண்டுதோறும் திருக்கோடிக்காவலில் அரங்கேறும் அதிசயம்!

25/09/2021 – இன்று புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை. இன்றைய சுபதினத்தை முன்னிட்டு திருக்கோடிக்காவல் சிவாலயத்தில் மட்டும் வித்தியாசமான தொன்மையான ஒரு ஐதிகம் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் சிவாலயம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்று மூன்றாலும் புகழ்வாய்ந்த பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.

தமிழில் வடிவுடையம்மன் என்றும் சமஸ்கிருதத்தில்  திரிபுரசுந்தரி என்றும் வழங்கப்பெறும் இத்திருக்கோயிலின் அம்பாள் சாந்நித்யம் மிகுந்தவள், வரப்பிரசாதி. இந்த அம்பாள் சந்நிதியில் பாஸ்கராச்சார்யாரால் லலிதாசகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் இயற்றப்பட்டது. அவர் சகஸ்ரநாமத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் பாஷ்யம் எழுதிக்கொண்டேவர, அம்பாளோ – தன் கொலுசணிந்த கால்களால் ‘ஆமாம்’ என்று ஆமோதித்ததுபோல ஓசையிட்டதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.

அம்பாளுக்குத் திருப்பதி வேங்கடபதியின் அலங்காரம்

அதுபோல எத்துனையோ சிறப்புக்களை இந்த சிவாலயத்து திரிபுரசுந்தரி கொண்டிருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்க, இன்னமும் ஆண்டுதோறும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிற பெருமையுடைய வைபவம் ஒன்றும் இருக்கிறது.

ஒருமுறை ஆழ்வார்கள், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கத் திருவேங்கடம் சென்றபோது, அவர்களுக்கு இறைவன் வேங்கடேசன் மூலம், திருக்கோடிக்காவல் தலத்தை தரிசிக்குமாறு அசரீரி கேட்டதாம். அவர்களும் அவ்விதமே இத்தலத்தை வந்தடைந்தபோது காவிரியில் பெருவெள்ளம் கரைபுரண்டோடிட, அவர்களோ அகத்திய மகரிஷியின் உபாயத்தின்படி கரையேற்று விநாயகரைப் பிரார்த்திக்கவே, வெள்ளம் குறைந்து இத்திருக்கோயிலினை வந்து சேர்ந்தனராம்.

அவர்களுக்கு அன்னை திரிபுரசுந்தரியோ, திருவேங்கடநாதராகவே காட்சித்தந்து அருளிச் செய்தாராம். அதனை சிறப்பிக்கும்விதமாகவே இன்றும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை ஒன்றில் அம்பாளுக்கு  வேங்கடாசலபதியாக அலங்கரிப்பது என்பது இக்கோயிலில் மட்டுமே ஐதிகமாக இருந்து வருகிறது.

சைவ வைணவ பேதமின்றி பொதுவாகவே நிறைய சிவாலயங்களில், கோஷ்ட சிற்பங்களிலும் கோபுர, விமான சுதை சிற்பங்களிலும் மஹாவிஷ்ணு அலங்கரிப்பார்.

பெரும்பாலான சிவாலயங்களில் அர்த்த மண்டபம், கருவறைச் சுவர்களில் குறுஞ்சிற்பங்களாக ராமாயணக் கதைகள் வடிக்கப் பெற்றிருக்கும்.

திருக்கோடிக்காவல் அம்பாள்

இப்படியாக சிவ, விஷ்ணு இறை மூர்த்தங்கள் ஒரே ஆலயத்தில் அருளும் பெருமையை நிறைய ஆலயங்களில் கண்டிருந்தாலும் அம்பாள் – வேங்கடவன் ரூபத்தில் அருளும் ஓர் ஐதிகம் இங்குதான் அரிதான வழிபாட்டுமுறையாகக் கடைபிடிக்கப்படுகிறது.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவனை தொழுது பாடும், ‘படமாடு பன்னகக் கச்சை அசைத்தான் கண்டாய்’ எனத் தொடங்கும் பதிகத்தில், “குடமாடியிடமாகக் கொண்டான் கண்டாய், கோடிகா அமர்ந்துறையும் குழகன்தானே” என்று பாடுகிறார்.

இதில் குடமாடி எனும் பதம் மூலமாக, “குடக்கூத்தாடிய திருமாலை இடப்பாகத்தே கொண்டு அரிஅர்த்தராகத் திகழ்ந்த இளைஞனே” என்கிறார் இத்தலத்து இறைவனை.

உமையை இடமாகக் கொண்ட ஈஸ்வரன் எனும் பொருளில் அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டு. ஆனால் இப்பதிகத்திலோ உமையவளுக்குப் பதிலாக “குடமாடி இடமாகக் கொண்டாய்” என்று திருமாலை இடமாகக் கொண்ட அரிஅர்த்தன் எனும் திருநாமத்தினைக் கொண்டு திருக்கோடீசனைத் தொழுவதால், சுவாமியின் இடப்பாகத்திலே அம்பாள் இருப்பதாய் வணங்குதல் போல, இங்கே சுவாமியின் இடப்பாகத்திலே பெருமாள் இருப்பதாகத் துதிப்பதால், இங்கு அம்பாளே பெருமாளாக வணங்கப்பெற்றது எனும் கருத்து சைவ வைணவ பேதமற்ற நம்பிக்கையில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments